வெள்ளி, 2 அக்டோபர், 2009

நாகை பெரிய கோயில்

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் உடன் உறையும் அன்னை நீலாயதாக்ஷி திருக்கோயில், காவிரி ஆற்றின் தெற்கே அமைந்த திருநாகை என்னும் நாகப்பட்டினம் நகரில், கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்குள் அமைந்திருக்கிறது. இக்கோயில் ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன.. 

இத்திருக்கோயில், தேவார தலங்களில் 82ஆவதாகவும்,  64 சக்தி பீடங்களிலும், சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகவும் பெருமையாகத் திகழும் தலமாகும். 

ஆதிசேஷன், சிவபெருமானைப் பூஜித்த தலமாதலால், நாகப்பட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறுவர். 
 
புண்டரீக முனிவரின் பக்தியையும் தவத்தையும் மெச்சிய சிவபெருமான், அம்முனிவரைக் காயத்துடன் ஆரோகணித்து ஏற்றுக்கொண்ட காரணத்தால், இங்கு சிவன் காயாரோகணேஸ்வரர் ஆகிறார். இங்குள்ள சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் பின்புறம் உள்ள குளத்திற்கு, 'புண்டரீக குளம்' என்று பெயர். 

இந்திரனுக்கு உதவிய சாலீசுக மன்னனுக்கு, மன்னன் வேண்டியபடி, இந்திரன் பூஜித்து வந்த சுந்திர விடங்கர் விக்கிரகத்தை தர, அதை மன்னன் காயரோகணேஸ்வரர் சன்னிதிக்குத் தென் புறத்தில் பிரதிஷ்டை செய்தான். 

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அதிபத்தி என்ற மீனவ சிவ பக்தர், பக்தி மேலீட்டால், தனக்கு கிடைக்கும் முதல் தடவை மீன் அனைத்தையும் உறுதியுடன் சிவனுக்கே அர்ப்பணித்தார். சோதனை விரும்பிய சிவபெருமான், சில நாட்கள் மீன் கிடைக்காமல் செய்ய, சிறிதும் கலங்காத அதிபத்தி பட்டினி கிடந்து, சிவனை வேண்டினார். மறுநாள் ஒரு மிக அழகிய மீன் கிடைத்தும் அதையும் பரமனுக்கே அர்ப்பணித்தார் பரம பக்த அதிபத்தி..  மறுநாள் கிடைத்த வெள்ளி மீனையும் அவ்வாறு ஆண்டவனுக்கே சமர்பித்தார்.  கடைசியாக எல்லோருக்கும் வாழ்நாள் முழுதும் வளம் பெற வைக்கத்தக்க, தக தகவென மின்னும் ஒரு தங்க மீனைப் பரமன் தர, யார் சொல்லியும் கேளாமல், அதையும் தான் போற்றும் எம்பிரான் காயாரோகணேஸ்வரருக்கே அர்ப்பணிக்க, அம்மையும் அப்பனும் மனமகிழ்ந்து, அவருக்குக் காட்சி தந்து, "சிவலோகம் சென்று சிவகணங்களுடன் சேர்ந்து, ஒப்பில்லாத பேரின்பம் அடைக" என்று அருள் வழங்கினார். 

அதிபத்தரும் பல நாட்கள் சிவன் தாள் போற்றி, அவன் அருளால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து, சிவனடி சேர்ந்து முக்தி அடைந்தார். 'அதிபத்தி நாயனார்' என்ற திருநாமத்துடன், 49ஆவது நாயன்மாராக ஆட்கொள்ளப்பட்டார் என்பது நாகப்பட்டின தல வரலாறு.  இக்கோயிலில் அதிபத்தி நாயனாருக்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது. 

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட தலம் இது. 

"வினையிலே விழுந்து அழுந்தி வேதனைக் கிடமாகாரே
கனையுமா கடல்சூழ் நாகைமன்னு காரோணத்தானை
நினையுமா வல்லூர் ஆகி உய்யலாம் நெஞ்சினீரே" 

என்று பாடுகிறார் அப்பரடிகள். 

திருக்கடையூரில் அபிராமி பட்டர், 

"தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும், தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிலா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே
கனம் தரும் பூங்குழளாள் அபிராமி கடைக்கண்களே" 

என்று பாடியதற்கு ஒப்ப, 

பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், பாசாங்குசம் ஏந்தி, அபய முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், அன்னை நீலாயதாக்ஷி (கருந்தடங்கண்ணி) மகப்பேறும், மகத்தான செல்வமும், வேண்டுபவர்க்கு வேண்டியதையும், நினைத்த நல்லவற்றை நடத்திக் கொடுத்தும், அழகுத் திருக்கோலத்தில் இருந்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறாள். நிலவின் ஒளியை மறைக்கும் ஒளி மிகுந்த திருமுகம், அருளும் கருணையும், வாத்ஸல்யத்தையும் வாரி வழங்கும் நீலத்திருக் கண்கள்.

"நீ என்னிடம் வந்துவிட்டாய்,  இனி கவலை வேண்டாம் குழந்தாய், நீ நினைத்ததை நான் செய்து தருகிறேன்" என்று அபயம் அளிக்கும் அபய ஹஸ்தம். இத்திருக் கோலத்தை ஒரு தடவை மட்டும் தரிசித்தால் கூட நமது பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். 

அன்னை கருவறைக்கு எதிரில்,  ஒரு கண்ணால் அம்பிகையையும், மற்றொரு கண்ணால் ஈசனையும் தரிசித்து மகிழ்வது போல், தலையைச் சற்றே சாய்த்து எழிலுடன் அமர்ந்திருக்கும் நந்தி தேவரின் சிலை காண்பதற்கும் தரிசிப்பதற்கும், கண் கொள்ளாக் காட்சி.. 

இது தவிர, இக்கோயிலின் சிறப்புகள் _ 

* நாகாபரண பிள்ளையார் தான் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்;  பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே.  திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார். 

* இங்குள்ள நவக்கிரகர்கள் சன்னிதியில் அவர்கள் அனைவரும் மேற்கு நோக்கியிருக்கிறார்கள் என்பதோடு, தசரத சக்கிரவர்த்தியினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வரர் தனியாக தெற்கு நோக்கி சாந்தமூர்த்தியாக அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். 

* ஜீவ சமாதி அடைந்ததாக கருதப்படும் 18 சித்தர்களில் ஒருவரான அழுகுணி சித்தர் தனி சன்னிதியில் தவக்கோலத்தில் பக்தர்கள் வேண்டுவதை வழங்கிக் கொண்டிருக்கிறார். 

* நாயன்மார்களை தொகுத்து தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் பொற்காசு பெற்றது இத்தலத்தில் தான். 

* அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றி பாடப்பட்ட ஒரே கல்லிலான வள்ளி-தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமானின் அழகான திரு உருவம் இக்கோயிலின் கோனார் மண்டபத்தின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது. 

* இக்கோயிலில் கல்லிலான சங்கிலி அமைக்கப்பட்டிருக்கிறது. 

* சப்தரிஷிகளுக்கும் ஈசன்  காட்சி கொடுத்த தலம் இது. 

அன்னை சக்தியின் ஆட்சி நடைபெறவது, மதுரையம்பதியில் மட்டுமல்ல. 

அவள்

* காஞ்சியில்  காமாட்சியாகவும்,
* காசியில் விசாலாட்சியாகவும்,
* நாகையில் நீலாயதாக்ஷியாகவும்
* ஆரூரில் கமலாக்ஷியாகவும்  

அருளாட்சி புரிந்துவருகிறாள். 
 
அதானால்தான், அன்னையைப் போற்றும்பொழுது, 

"அம்மை காமாட்சியே கருணா கடாட்சியே,
அரிய மதுரை ஆளும் மீனாட்சியே
நம்பும் அடியார்கள் கண்ணுறும் காட்சியே
நாகையதனில் வாழும் நீலாயதாக்ஷியே
சம்பு மோகித்திடும் காசி விசாலாக்ஷியே
சாலத் திகழும் ஆரூர் கமலாக்ஷியே
அடியாரைக் கரையேற்றும் அகிலாண்ட நாயகியே
கும்பிட்டு உனதடி குறுகிப் பணிந்தோம்
கெளரியே எழுந்தருள்வாயே" 

என்று போற்றி வணங்குகிறோம். 

இத்துணை சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயில், பக்தர்கள் அதிக அளவில் தரிசிக்க வராததால், சரிவர பராமரிக்க முடியாத நிலையில் இருப்பது, வருந்தத்தக்கதாக இருக்கிறது. அரசும், அதைச் சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இன்னும் நன்றாகக் கவனித்தால், சரித்திரப்புகழ் பெற்ற பழமையான இத் திருக்கோயில் அதற்குரிய மதிப்பையும் புகழையும் மீண்டும் பெற்று, திருவிழாக்கள் அனைத்தும் நல்ல முறையில் நடத்தப்பட்டு, சீரும் சிறப்புடன் திகழ உறுதுணையாகும் என்பது நிச்சயம்.

பக்தர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி சென்று, சக்தி வாய்ந்த அன்னை நீலாயதாக்ஷி சமேத காயாரோகணேஸ்வரர், மற்றும் இதர தெய்வங்களின் அருளுடன் எல்லா ஐஸ்வர்யங்களும் பேறும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறோம். 

"கண்கவர் தங்கமய நீலாயதாக்ஷி
என்றென்றும் நமஸ்காரம் ஏற்றருள் புரிவாயே!"
-- நாகை வை. ராமஸ்வாமி

நன்றி : chennaionline

2 கருத்துகள்: