திங்கள், 31 ஆகஸ்ட், 2009

லோயர் பாரம் !

ஆறு முதல் எட்டு வரை எங்கள் பள்ளி!
ஐந்தாம் வகுப்பு தேறியவுடன், பெரிய பள்ளி என்கிற National High School லில் கொண்டு சேர்க்கப் பட்டோம். ஐந்தாவது வரை தரையிலும், பெஞ்சிலும் குப்பை கொட்டிவிட்டு, பெரிய பள்ளியில் டெஸ்க் அட்டாச்ட் பென்ச் புதுமையான மாற்றம், எங்கள் செதுக்கும் திறமையை அங்கு எங்கும் காணலாம். பென்ச், டெஸ்க்டாப், ரப்பர், வகுப்பு வாசலில் இருக்கும் மரம் யாவற்றிலும் நீக்க முடியாதபடி நிலைத்திருக்கும். ஆறுமுகம்(பத்தர்) ஜோசஃப்ரயான், ஸ்ரீதர், புஷ்பவனம், தியாகராஜன், ப்ழ பழ பழ்லெ பழனியப்பன் போன்றவர்கள் அறிமுகம் அங்கு தொடங்கிய்து. பெரிய பண்டிட், வைத்தியனாத வாத்யார், லக்ஷ்மண வாத்யார், கடுமையாக அடிக்கும் ட்ராயிங்க் மாஸ்டர் வடிவேலு ஸார், லக்ஷ்மிஸ்டோர் வைத்யனாத வாத்யார் என்கிற புதிய ஆசிரியர்கள் மத்தியில் சற்றே மிரட்சியுடன் தொடக்கம். ஹைஸ்கூலில் பெரிய பண்டிட் மகன்தான் ப்ரேயர் பாட்டாகிய, "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே" யை பாடுவான். அவன் லீவில் போனால்தான் வேறு யாரும் அந்த இடத்தைப் பிடிக்க முடியும். அஸிஸ்டண்ட் ஹெட் மாஸ்டர் கஸ்தூரி ரங்கன் சார் ப்ரேயரில் யாரேனும் பேசுகிறார்களா என தீவிரமாகக் கண்காணிப்பார். பேசுபவர்களுக்குப் பிரம்படி உண்டு.

எட்டாவதில் நான், சந்தானம், ஸ்ரீதர், புஷ்பாவனம், ஜோசப்ராயன், காராசேவ் மணி ஒரே க்ளாஸில் படித்தோம். ஸ்ரீதர் அவன் வீட்டு ரேடியோவில் விவித்பாரதி பாடல்களை கேட்டு எங்களுக்கு ஒலி பரப்புவான். இன்றய ஹாரி பாட்டெர் கதை போல் சோமசுந்தரம் எங்களுக்கு ஸ்கூலில் கதைகள் சொல்வான். கன்னித்தீவு மாதிரி முடிவே இல்லாத கதை. சப்த ஸ்வர ஜாலங்களுடன், நடிப்புடன் அவன் சொல்வதை வாய் மூடாமல் கேட்போம். இரண்டரை மணி சினிமா அவன் வாயில் நாள் கணக்கில் தொடரும். 'பறக்கும் தட்டு' என்ற கதையை முடிவேயில்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்!

பூசாரி(அவர் பெயரே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது) மாஸ்டர்(!) தான் in-charge. கோடையிடி ராமசாமியும், பூசாரியும் பி.டி மாஸ்டர்கள். முன்னவர் வாலிபால் சர்விஸ் போட்டால் கோடை இடிபோல் சௌண்ட் வருமாம். "கோடையிடி இடிக்க, பூசாரி உடுக்கடிக்க, சிங்காரவேலு நாட்டியமாட!" என்ற பாட்டுஅவர்கள் வரும்போது எங்கள் நடுவில் இசைக்கப்படும். சிங்காரவேலு மற்றொரு பி.டீ & என்.சீ.சீ மாஸ்டர். அந்த காலதிலேயே சிண்டிகேட் அமைத்து, பள்ளி ஏலத்தில் குறைந்த விலைக்கு பழைய ஸ்போர்ட்ஸ் பொருட்களை வாங்குவோம். நான் பாட்மிண்டன் விளையாடுவேன். ராக்கெட்டின் கெட் அடிக்கடி பிய்ந்துவிடும். ஃபுட்பால் மௌத் பன்னார் அறுந்துவிடும் எனவே சியால்காட் ஸ்போர்ட்ஸ் கடையை அடிக்கடி முற்றுகையிடுவோம்.

முதலில் ACC ல் சேர்ந்தோம். சிங்காரவேலு ஸார்தான் மாஸ்டெர். ஏ.சி.சி யில் சேர்ந்தால்தான் என்.சீ.சீயில் சேர்த்துக் கொளவார் என்பதனால் அதில் சேர்ந்தோம். நானும், சந்தானமும் எதிலும் சேர்ந்துதான் இருப்போம். எட்டாவதுவரை குமர கோவில் ஷெட்டில்தான் வகுப்புகள். ஏழாவ்தில் குடுமி வைத்யனாத அய்யர் க்ளாஸ். ஒவ்வொரு வகுப்பிலும் பின்புறம் உள்ள இடத்தில் தோட்ட வேலை செய்து பூ அல்லது கறிகாய் செடிகளைப் பயிரிடவேண்டும். ஆசையாக செடிகளை வளர்த்து, பின் வேறு க்ளாஸ் போவது கஷ்டமாகஇருக்கும். எட்டாவது லக்ஷ்மண வாத்யார் க்ளாஸ். நான், ஸ்ரீதர், புஷ்பவனம் ஒரே பெஞ்ச். எதனாலோ சண்டை வந்து நானும் ஸ்ரீதரும் பல வருடங்களுக்குப் பேசிக் கொள்ளவில்லை. அவன் அண்ணா சந்த்ரு, எனக்கு ரொம்ப க்ளோஸ். பேருக்குத்தான் ஹைஸ்கூல். ஆனால் 6வது, 7வது, 8வது வகுப்புக்கள் மாத்திரம் சுதந்திரமாக இங்குநடக்கும். பள்ளி ப்யூன் அவ்வப்போது சர்க்குலர்களைக் கொண்டு வந்து ஆசிரியர்கள் கையொப்பம் பெற்றுச செல்வார். மற்ற பெரிய வகுப்பு மாணவர்கள் தொடர்பு மிக குறைவு. எனக்கு சூப்பர் சீனியரான ஜயராமன் மூன்றாவது வீடு. எனவே, அவர்களுடன் ஸ்கூல் வரும்போது கூட வருவேன், போவேன். அவ்வளவுதான்!
With love and affection,
ரங்கன்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

அந்த நாள் ஞாபகம் .. நெஞ்சிலே

ஒரு விஜயதசமி நன்னாளில் சாமினாத வாத்யார் என் கையைப் பிடித்து ஹரிஹிஓம் என்று மணலில் எழுத வைத்து 6 1/4அணா கொடுத்து சேர்ந்த பள்ளிக்கூடம் என் வீட்டிலிருந்து மூன்றாவது கட்டிடத்தில் இருந்தது. அதனால் முதல் நாள் பள்ளி செல்லும்போது அழவேண்டும் எனக்கூட தோன்றவில்லை . மனோரமா டீச்சர் என் க்ளாஸ் டீச்சர். டீச்சர் என்றால் பெண்பால். வாத்யார் ஆண்பால் ... அது அப்படித்தான் ! மனோரமா மேடம் மிக பொறுமையான அன்பான டீச்செர். இரண்டாவது வகுப்பில் லில்லி புஷ்பம் .கௌதமன் சொன்னாற்போல் சற்றே கடுமையாக பேசுவார், நடத்துவார். எப்பொழுதும் மொட மொட புடவை , சின்ன குடையை ஆட்டி ஆட்டி பஸ் ஸ்டாண்டு அருகாமையிலுள்ள வீட்டிலிருந்து மனோரமா ,லில்லிபுஷ்பம் இருவரும் சேர்ந்து வருவதும் போவதும் அழகாக இருக்கும். சந்தானம் என் வகுப்புதான். அவன் பாக்கெட்டில் ஸ்கூல் வரும்போது சர்க்கரையும் அரிசியும் அல்லது குழம்புத்தான் (கறிகாய்) கட்டாயம் இருக்கும்!!
மூன்றாவது வகுப்பு சிங்காரம் பிள்ளை வாத்யார் மிக நன்றாகப் பாடுவார். நாலாவதில் மாரிமுத்து வாத்யார்.நாடக வசனம் எழுதுவது,பேச,நடிக்கச சொல்லி கொடுப்பது அவர் ஸ்பெஷாலிடி.5வதில் கோவிந்தராஜ் ஸார்.மனக்கணக்கு டக் என்று பதில் சொல்லாவிட்டால் மூக்குபொடி போட்ட கையோடு மூக்கை திருகுவார்.அதற்கு பயந்தே அவர் கேள்விக்கு வேகமாக,சரியாக, உடனடியாக பதில் சொல்லி விடுவோம்.
நான் பள்ளியில் சேர்ந்தபோது நடேச ஐயர் ஹெட்மாஸ்டர். அவருக்கு அடுத்து சுப்ரமணிய ஐயர். காரணப் பெயராக செவிட்டு வாத்யார் என்று அழைக்கப்பட்டார்.அவர் முகத்தில் காது கேளாததால் வரும் சந்தேகமும் கோபமும் கல்ந்த பார்வை ( என்னை வச்சு காம்டி கீமடி ப்ன்னிடலியே ?! ) அதனால் அவர் க்ளாஸ் பக்கமே போகமாட்டோம். சில காலம் அவர் ஸ்கவுட் மாஸ்டராயிருந்தார். தேர்முட்டி ஸ்கூலில் இருந்து ராஜாராம் ஸார் வந்தார். அவர் ஸ்கவுட்ஸ் மாஸ்டரானார்.அவர் வந்த பின்தான மடிப்பு கலையாமல் உடுத்தினால் எவ்வளவு மிடுக்காக இருக்கும் என்பது புரிந்தது.அந்த காலகட்டத்தில் அவர் மாடர்னாக இருந்தது எங்களை பெரிதும் கவர்ந்தது.
அந்த பள்ளியில் 5வது வரைதான் வகுப்புகள். எனவே 6வதுக்கு வேறு பள்ளிக்குப் போக வேண்டும். நாகையில் இரண்டு ஹைஸ்கூல்தான். ஒன்று நேஷனல் ஹைஸ்கூல் மற்றொன்று CSI ஸ்கூல். அனேகமாக நேஷனல் ஸ்கூல் பள்ளிகளில் படித்தவர்கள் நேஷனல் ஹைஸ்கூலுக்குத்தான் செல்வர். என்னுடன் படித்த சந்தானம்,ராமன்,முத்துரத்தினம்,சிவராமன்,சிவசங்கரன்,தண்டபாணி, மணிவண்ணன், G.R.குமார், சந்துரு எல்லோரும் பெரிய பள்ளிக்கூடம் சென்றோம்..தேர்முட்டி ஸ்கூல்,மெத்தை பள்ளிக்கூடம்,வெளிப்பாளயம் ஸ்கூல் என இதர பள்ளி மாணவர்களும் எங்களுடன் சேர்ந்தனர். (தொடரும்)
with love and affection,
rangan

புதன், 12 ஆகஸ்ட், 2009

தத்துவம் என்ன சொல்லுவாய்?

சில விஷயங்கள் எவ்வளவுதான் படித்தாலும் பிடிபடுவதில்லை!
ஆந்த்ரொக்ஸ் நோய் ஒரு காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. மாடுகள் ஆயிரக்கணக்கில் அதன் தாக்கத்தால் பலியாவதாக பரவலாக பேசப்பட்டு, பின் அதைபற்றிய பேச்சையே காணோம். பின் இங்கிலாந்தில் ஃபுட்மௌத் டிஸீஸால் கால் நடைகள் பாதிக்கபட்டு அதன் இறைச்சியை உண்பவர்கள் அந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற செய்தி அந்த நாட்டு பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது. இந்த வரிசையில்கோழிக்காய்ச்சல் நோய் வந்து அவ்வப்போது ஆயிரக்கணக்கான கோழிகள் கொலையுண்டு பெரிய பள்ளங்களில் நல்லடக்கம் செய்யப்பட்டன. டிங்கு ஜுரம்,சிக்கன் குனியா போன்ற நோய்களும் பரவி மக்களை நோயினாலும்,மருத்துவ செலவினாலும் வாட்டி வதைத்தது.
இந்த வரிசையில் இப்பொழுது H1N1 வந்திருக்கிறது.இந்த நோயின் தாக்கத்தில இருந்து காத்துக் கொள்வது எப்படி என்பதைவிட அதன் பாதிப்புகளைப் பற்றி மீடியாக்கள் விலாவாரியாக விவாதித்து தங்கள் வருவாயை அதிகரிப்பதிலும் மக்களை அச்சுறுத்துவதிலும் மிகுந்த கவனமாயிருப்பதாக நான் அபிப்ராயப்படுகிறேன். அரசும் தன் பங்கிற்க்கு இந்த நோயை,விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, முறையற்ற அரசு செயல்பாடு இவைகளால் மக்களுக்கு உண்டாகும் அதிருப்தியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் கேடயமாகவோ அல்லது திசை திருப்பும் உத்தியாகவோ பயன்படுத்துகிற்து.
ஏதேனும் நோய் மேலை நாடுகளில் உண்டானால், அது நம்மிடம் பரவும் முன் இங்கு முன் எசசரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஒருசமயம் குஜராத்தில் சூரத்தில் ப்ளேக் நோய் பரவியபோது மேல் நாடுகள் இந்தியாவிலிருந்து மக்கள் வருவதைத் தடுத்தது. ஆனால் இப்பொழுது நோயின் தோற்றம் அமேரிக்காவில் என்று தெரிந்தும் அங்கு மக்களை அனுப்பவும் அல்லது அங்கிருந்து வருபவரைத் தடுக்கவோ எந்த செயல்பாட்டையும் திறம்பட செய்யவில்லை. ராஜபாட்டையாக மேல் நாடுகளின் குப்பை கழிவுகளுக்கும், நோய் பரவலுக்கும் இந்தியாவைப் புகலிடமாக வைத்துள்ளோம். நாம் எப்பொழுதுமே அடிமை மனப்பான்மையிலேயே இருக்கிறோம். கப்பல் கப்பலாக குப்பைக் கழிவுகளை, நோய் கழிவுகளை இறக்குமதி செய்கிறோம். கண்ணை விற்று சித்திரம் வாங்குவதென்பது இதுதானோ?
நோயின் திறம்
, தோற்றம், பாதிப்பு, இவற்றில் நம் அணுகு முறை காலம் கால்மாக தற்காப்பு முறையில்தான் இருக்கிறது. மக்கள் சுகாதாரத்தின் நன்மையை உணராதவர்களாகவே இருக்கின்றனர். நோய் வந்தபின் அதை குணமாக்குவதற்கு ஆகும் செலவை விட அதை வருவதற்கு இடம் இல்லாமல் செய்வதற்கு.ஆகும் செலவும் முயற்சியும் குறைவாகவே இருக்கும் அல்லவா? கடைத்தெருக்கள், பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லூரி என எந்த இடத்திலும் சேரும் குப்பை கழிவுகளை அகற்ற நாமோ, அரசோ முனைப்புடன் எப்பொழுதும் செயல்படுவதில்லை. கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் செய்கிறோம். அதையும் ஆர்வமின்றி செய்கிறோம். இதையும் மீறி நம் நாட்டின் ஜனத்தொகை வளருவது உலக அதிசயந்தான் !!!
அன்புடன்
ரங்கன்.

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆடிப்பூரத் திருவிழா !

26.07.2009 அன்று திருநாகை திருக்காயாரோகண சுவாமி திருக்கோயிலில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் (பூரம் கழித்தல்) நடந்திருக்கும். நாகையில் இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும், ஆடிப்பூர விழா எப்போது வரும் எனக் காத்திருப்போம். கோவிலில் விழாவிற்காகக் கொடி ஏற்றுவதிலிருந்தே களை கட்ட ஆரம்பிக்கும். பந்தல்கள் கட்டுவதும், வாகனங்களுக்கு மராமத்து மற்றும் வர்ணம் பூசுவதுமாக கோவில் வளாகத்தில் விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும. தேர் பழுது பார்க்கப்பட்டு தேரின் கீழ்ப்பகுதிக்கும், சக்கரங்களுக்கும் கரு வண்ணம் அடித்து ரெடியாகும். அலங்கார சீலைகளும், குதிரை பொம்மைகளும் சீர் செய்யப்படும். சப்பரங்கள், உற்சவ மூர்த்திகள் மாத்திரம் பின் தங்குவார்களா? துரை குருக்களும், சோமு குருக்களும் விக்ரகங்களை ஆபரணங்களுடன் நேர்த்தி செய்வார்கள். கோவில் குளமும் மராமத்து செய்யப்பட்டு பாசிகள் நீங்கி அழகாக இருக்கும் கோவிலுக்கு வெளியே சன்னதியில் கடைகள் ஒவ்வொன்றாக வரும்.

.கல்சட்டி, பொம்மை , பிளாஸ்டிக் சாமான்கள், பீங்கான் ஜாடிகள், வ்ளையல்கள், கண்ணாடி, சீப்பு, ரிப்பன், இமிடேஷன் நகைகள் என யாவும் விற்பதற்கு வியாபாரிகள் தங்கள் கடைகளை ஜோடித்து தயாராவார்கள். பெரியவர்,சிறியவர் என அனைவருக்கும் தேவையான சாமான்களை கொண்டுவந்து கடைகளில் நிரப்புவார்கள். இந்த கடைகள் விழாவிற்கு 10 நாள் முன்னும் .10 நாள் பின்பும் இருக்கும். தின்பண்டங்கள் விற்பவர்களும் ஜரூராக தங்கள் உப்கரணங்களுடன் வந்து எல்லோரையும் பட்சண வாசனையால் இழுப்பார்கள். ரங்க ராட்டினம், குடை ராட்டினம் என குழந்தைகளை வசீகரிக்கும் விளையாட்டுகள் வரும்.

விழா ஆரம்பநாள் முதல் காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், வித விதமான வாகனங்களுடனும், பரிவாரத்துடன் நகரில் ஊர்வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும். அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வரக் கலைஞ்ர்களும், ஓதுவார்களும் வாசித்தபடி , ஓதியபடி வருவர். நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்கும். இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும். மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து, கோலமிட்டு விமரிசையாக வரவேற்பர்.

நான் என் நண்பர்களுடன் தினமும் கோவில் செல்வேன். இந்த காலத்தில் எங்கள் விளையாட்டுத் தலம் கோவிலாக மாறிவிடும். விழாவை ஒட்டி ஊர் மக்கள் வெளி ஊரிலிருந்து வந்த வண்ணம் இருப்பர். பழைய நண்பர்களையும் காண, பழக இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். கடைகளில் ரோஸ்கலர் ஜவ்வு மிட்டாய், குசசி ஐஸ்க்ரீம், கடல் பாசி என்கிற பல வண்ணமான தின்பண்டத்தையும், ருசி பார்ப்போம். கோலிகுண்டு, பம்பரம் இத்யாதி வகைகளை inventory update& replenish செய்ய நல்ல சமயம் இதுவே.

பெரிய வித்வான்கள்(ஏகேசி,இஞ்சிக்குடி,குளிக்கரை போன்றவர்கள் மற்றும் மதுரை சோமு) கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டுச் செல்வார்கள். அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை, மாலை எந்நேரமும் கோவிலில் திரளாகக் கூட்டம்!. ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது AKC நடராஜன், உன்னியுடன் க்ளாரினெட் வாசிப்பார். அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தருவாள். நம்மூரில் பின்னலங்காரம் மிக விசேஷமாக இருக்கும். அதைக் காணும் விதத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வைக்கப்படும். ஆடிப்பூரம் கழிப்பு காலை 11 மனிக்குள் முடியும். இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும்.

தேர் அன்று காலை தேர் நிலையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களால் இழுக்கப்படும். முட்டுகட்டையை 20,30 பேர் கண்காணித்து தேரின் வேகத்தையும், போக்கையும் கட்டுப்படுத்துவார்கள். எல்லாம் சரிவர நடந்தால் தேர் மீண்டும் நிலைக்கு சாயங்காலம் வந்துசேரும். எங்கேயானும் சிக்கிக் கொண்டால் மறு நாள்தான் வந்து சேரும் . தேருக்கு முன் எக்காளம் ஊதுவோர், தமுக்கு அடிப்போர் என ஆர்பபாட்டமாக இருக்கும். தேரினுள் வாத்யக்காரர்கள் அமர்ந்து வாசிப்பர். கோவில் விழாவினால் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வலுப்படும். கோவிலில் தேவையான பணிகள் நடக்கும்; கோவிலுக்கு வருமானமும் அதிகரிக்கும். எனவே ஆடிப்பூரம், மாரியம்மன் கோவில் செடில், நாகூர் கந்தூரி, வேளாங்கண்ணி பண்டிகை போன்ற சமயங்களில் நம் குடும்பத்துடன் நம் ஊருக்கு சென்றால் ஊருடன் நமக்குள்ள தொடர்பு காலத்திற்கும் நிற்கும். நம் குழந்தைகளும் நம்முடைய கலாசாரத்தையும், கோவில்களையும், பழக்க வழக்க்ங்களையும் அறிந்துகொள்வாரகள். பிறந்த ஊரின் வளர்ச்சியில் நம் பங்கு மிக அவசியம், நம்முடைய வளர்ச்சியை அறிந்து கொள்ள நம் ஊர் நமக்கு நல்ல உரைகல்லாகவும் இருக்கும்.

நாகையில் இதைத் தவிர பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி, சிக்கில் சூரசமஹாரம், திருவாரூர் தேர் மற்றும் தெப்பத் திருவிழா என்று வருடம் முழுதும் எங்கேயாவது விழாக்கள் நடக்கும். ஒவ்வொரு விழாவும் முடிந்த பின் ஏக்கப் பெருமூதச்சுடன் அடுத்த விழாவை எதிர் நோக்குவோம். அந்த காலகட்டத்தில், பொழுது போக்கு இப்படித்தான்!. டி. வி - மக்களைக கட்டுப்படுத்தாத (கட்டிப்போடாத ) காலம்.!
இதை எழுதும்போதே, எனக்கு நுப்பது வருடங்கள் பின் சென்ற உணர்வு. அதேசமயம் எல்லாமே நேற்று நடந்ததுபோல ஞாப்கம். இந்த கலந்த அனுபவம், வாசிப்பவர்களுக்கும் ஏற்பட்டால் , என் கட்டுரை வெற்றி பெற்றதாக நினைப்பேன்.
அன்புடன்
ரங்கன் (rangan1948@yahoo.com)