புதன், 22 ஜூலை, 2009

நாகை நினைவுகள் 01 ... By ரங்கன்

நாகை நினைவுகள் 01 by ரங்கன்
என் இனிய நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் என் வாழத்துக்கள்!
நம் இளமைப்பருவத்தில் சில படிவுகளை நினைவு கூர்கிறேன். அனைவரும் கடுவனாறு (உப்பனாறு) மற்றும் அக்கரைப்பேட்டையில் கடற்கரைப் பகுதியை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். உப்பானாற்றைத் தாண்டி அந்த பக்கம் செல்வது எளிதல்ல.. படகில் அந்த பக்கம் செல்ல வேண்டுமானால். அதற்கு பணம் தேவை. மாற்றாக அரை ட்ராயரை மேலும் மடித்துக்கொண்டு தண்ணீரில் கடக்கவேண்டும். இந்த பல காரணங்களால் வீட்டு பெரியவர்கள் அங்கு செல்ல் அனுமதிப்பதில்லை. எனவே அங்கு செல்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் செல்வதுதான் அதிகம். சாதாரணமாக சீனியர்கள்தான் போவார்கள்; .நாம் ஒட்டிகொள்வோம்! அவர்களும் தங்கள் அந்தர்ங்கத்தை பகிர்ந்துகொள்ளவும் அல்லது திருட்டு தம் அடிக்கவும் அந்த இடத்தை பயன் படுத்துவர். நிதானமாக கடல் நீரில் குளிக்க அந்த இடத்தை விட சிறந்த இடம் நாகையில் கிடையாது.

ஒரு பக்கம் கடல், மறு பக்கம் உப்பனாறு - அக்கரையிலிருந்து ஹார்பர் செல்லும் பெரிய மரக்கலங்கள், லைட் ஹௌஸ் எல்லாம் அந்த வயதில் மிக அதிசயமான சமாசாரங்கள். உப்பானாற்றில் எப்போதாவது கடல் பசு என்று சொல்லப்படுகிற வேடமீன் வரும். அதன் தலை வெளிப்படுகிற சமயத்தில் எல்லோரும் கூச்சல் போடுவோம். மீனவர்கள் அதை வலையில் பிடித்தாலும் விட்டு விடுவோம் என்று சொல்வார்கள். தண்ணீரில் கும்மாளம் போட்ட அடையாளம் தெரியககூடாது என்பதில் எல்லோரும் மிக கவனமாக இருப்பார்கள். ஹாஃப் ட்ராயரை மணலில் புரட்டி தோளில் போட்டுகொண்டு வ்ந்தால் வீடு வருவதற்குள் காய்ந்துவிடும். தெருக்கோடியில் இரண்டு முறை குதித்தால் மொத்த மண்ணும் உடம்பிலிருந்து உதிர்ந்துவிடும். வரும் வழியில் கொடி மர மேடை போக வேண்டாமா? அந்த நாளில் ரேடியோ கேட்பது அரிது. ஏனென்றால் வீடுகளில் மிக வசாதி படைதவர்கள் மட்டும் தான் வானொலி பெட்டி என்கிற் ரேடியோ வைத்திருப்பார்கள். மாலையில் அங்கு சென்று விவசாய செய்தி, பண்ணை செய்தி, மானில செய்தி என்கிற உப்பு சப்பற்ற விஷயங்களை கேட்டால் ஒரிரு சினிமா பாடல்களையும் கேட்கலாம்! !. ஒரே ஒரு ரேடியோ டீலர்தான் எங்கள் ஊருக்கு.நேஷனல் எகோ,மர்ஃபி விற்கும் சுந்தரம் என்ன கொடுக்கிறாரோ அதுதான் ரேடியோ.

உப்பானாற்றின் எதிர்ப் பக்கமாக சற்று பின்னால் சென்றால் சால்ட் குவட்டர்ஸ் என்கிற இடம் இருக்கு அங்குதான் எங்கள் கிரிக்கெட் கிரவுண்டு.பெரிய மாட்சுகள் அங்கேதான் அரங்கேறும். நான்,சந்தானம்,காராசேவு மணி, கு.வெ.டேசன், புஷ்பவனம்,மூர்த்தி வழக்கம்போல் வீட்டுக்கு தெரியாமல் பள்ளியில் ஏலம் எடுத்த பாட், க்ளௌஸ் வகையறாக்களுடன் ஆர்பபாட்டமாக சென்று விளையாடுவோம். சமயங்களில் பாட்மிண்டன் விளையாடுவது உண்டு. ஒரு பெரிய இழப்புக்குபபின் அங்கு யாரும் செல்வதில்லை,

காடம்பாடியில் வெளிப்பாளயம் ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த திறந்த வெளி எங்கள் விளையாட்டுக்கு உதவியாய் இருந்தது. நாங்கள் பத்தாவது படிக்கும்போது பாலம் கட்டி முடித்துவிட்டார்கள். ஒரு வித்யாசமான பாலம். கீழே படகு போகும்போது பாலத்தின் நடு பாகம் ப்ரத்யேக செயின்களால் உயரே தூக்கப்படும். அதை பார்ப்பதற்கு வெளிப்பர்ளையதிலிருந்து வாடகை சைக்கிள் எடுத்து செல்வேன். சந்தானம் அவன் அப்பா சைக்கிளை ஏதேனும் சாக்கு சொல்லி எடுத்து வருவான். பாலம் உயருவதை ஏதோ சாதனை போல பார்த்துவிட்டு வருவோம். பாலத்தில் உட்கார்ந்துகொண்டு சிலர் நண்டு பிடிப்பார்கள். பிடித்த நண்டுகளை வலைக்குள் போட்டிருப்பார்கள். கடல் நண்டுகள் செக்க சிவப்பாக பெரிய அளவில் இருக்கும். வேடிக்கையாக் அய்யர் பசங்க்ளே எடுத்துப்போய் ஆக்கி சாப்டுங்க என்பார்கள். ஜாதி வித்யாசம் அதிகம் பார்க்காத (பாதிக்காத) நாட்கள் ! வெட்கப்பட்டுகொண்டு ஓடி வநதுவிடுவோம். மனதிற்குள் நிறைய சந்தேகங்கள். அந்த பெரிய பற்கள், கத்தி போன்ற கைகளை எப்படி சாப்பிடுவார்கள் என்றெல்லாம் ... (தொடரும்.)

ஞாயிறு, 5 ஜூலை, 2009

Nagapattinam land of all religions

Welcome to all connected with Nagapattinam of yesterdays, Today and Tomorrows!