புதன், 30 செப்டம்பர், 2009

நாகை தமிழ்

நாகப்பட்டினம் - தமிழ் - இரண்டையும் ஒருங்கே நினைத்துப் பார்த்தால் - நாகையில் நான் பயின்ற தமிழ் குறித்துத்தான் - எண்ணத் தோன்றுகிறது. எட்டாம் வகுப்புக்குப்பின் - ஆங்கில மொழிக் கல்விக்கு தடம் மாறிவிட்டதால், அதுவரை தமிழை ஒரு பாடமாக - நினைத்து தேர்ச்சி பெற வேண்டிய அளவுக்கு, மதிப்பெண் எடுக்க , என்று படித்த காலம் போய், தமிழை, தமிழுக்காக படித்த காலம் ஆரம்பமானது. இலக்கணம் கிடையாது, கட்டுரை,  துணைப் பாடம் இத்யாதிகள் கிடையாது. அந்தக் காலத்தில் எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க சு பன்னீர்செல்வம் என்று ஓர் ஆசிரியர் வந்தார். ஆசிரியப் பணி அரை மணி - அரட்டை மற்றும் அக்கப்போர் - அரை மணி என்று வகுப்பு நடத்துவார். (பொன்னியின் செல்வன் படித்துவிட்டு - நாகப்பட்டினம் புவியியல் குறித்து அவர் அவிழ்த்துவிட்ட அரை டஜன் 'டுப்'புகள் இப்பொழுதும் எனக்கு கனவில் வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் - எவ்வளவு பலமான தாக்கம் என்று!)  அப்பொழுது பதவியைப் பிடித்த ஒரு மூன்றெழுத்துக் கட்சி மீதும், அதற்கு பெரும் பங்கு காரணமாயிருந்த ஒரு மூன்றெழுத்து நடிகர் மீதும் அவருக்கு நிறைய பக்தி. ஒரு கிறித்துவப் பாதிரியாரின் மகனாக இருந்ததால், வாய்ப்பு வாய்க்கும்போதெல்லாம் இந்துக் கடவுள்களை ஜாடை மாடையாக கிண்டல் செய்வார். ஆனால் எல்லை மீறியதில்லை.
மாணவர்களிடம் அவர் ஒரு முறை தேர்வு எழுதப்  பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து  சொல்லும்பொழுது - விடைத் தாளில் பிள்ளையார் சுழி போடாமல் - மாணவர்கள் கீழ்க் கண்ட வரிகளில் ஏதேனும் இரண்டு வரிகளை எழுதி, பிறகு தமிழ்த தேர்வு எழுதினால் - விடைத்தாள் திருத்துபவரைக் கவரலாம் என்று கூறினார்.
அவற்றில் சில இதோ:
தேனொழுகும் தீந்தமிழே - நீ கனி, நான் கிளி 
வேறென்ன வேண்டும் இனி!
இறக்கின்ற நிலையினிலும் - இன்பத தமிழே உன்னை
மறக்காது நான் ஓத வேண்டும்.
இதுமாதிரி - அவர் பத்து இருவரிக் கவிதைகள் எழுதிப் போட்டார் - கரும்பலகையில். மாணவச் செல்வங்கள் - அதை எல்லாவற்றையும் தங்கள் நோட்டில் பக்தி சிரத்தையுடன் எழுதிக் கொண்டனர். 
அந்த ஆண்டு - தமிழ்ப் புத்தகத்தில் பாடம் முடிவில்  - கேள்விகள் இருக்காது -- கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் மட்டும் மனப்பாடம் செய்து - அதை அப்படியே தேர்வில் எழுதி - மதிப்பெண் பெறுவது என்ற மனோபாவத்தில் வளர்ந்த பல மாணவர்கள் அந்த காலக்கட்டத்தில் மிகவும் திணறிப் போய்விட்டார்கள். காலாண்டுத் தேர்வில் - அந்தத் தமிழ் ஆசிரியர் - கேள்விகளை -- மிகவும் கடினத் தமிழில் -- உதாரணமாக " பொய்யா விளக்கு பற்றி ஆசிரியர் புகலுவதைப் புகலுக ", "வரைந்தவைகளை வரைக", "அறைந்தவைகளை அறைக ", "விளக்குபவைகளை விளக்குக " என்றெல்லாம் அமைத்து - தன புலமையைக் காட்டியிருந்தார்.
அந்தக் காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் எழுதியிருந்த விடைத் தாள்களை -- திருத்தி, மதிபெண்களுடன்  திருப்பிக் கொடுக்கும் நாளில் - அந்த ஆசிரியர் எவ்வளவு திண்டாடிப் போயிருப்பார் என்று தெரிந்தது.
பல மாணவர்கள் அவர் எழுதிப் போட்ட - எல்லா இரு வரிகளையும் பக்தியோடு எழுதி, வேறு விடைகள் எதுவும் எழுதாமல் விட்டிருந்தனர். விடைகளுக்கு பதிலாக - அந்த இரு (பது) வரிகள் போதும் என்று நினைத்திருந்தனர் போலிருக்கிறது.
ஒரு மாணவர் இரண்டே வரிகள்தான் எழுதியிருந்தார்.
" இறக்கின்ற நிலையில் இருக்கும் இன்பத் தமிழே!
நீ கிளி - வேறென்ன வேண்டும் இனி?"

2 கருத்துகள்:

  1. ஹா! கடைசியில் எழுதியிருப்பது தான் அருமை.

    பதிலளிநீக்கு
  2. நாகப்பட்டினம் நெய்மிட்டாய்
    என்ற கடை மதுரையில் 1960ல் பார்த்திருக்கிறேன்.அது என்ன ஸ்பெஷல்?எங்கள் திருநெல்வேலி அல்வா மாதிரியா...

    பதிலளிநீக்கு