வியாழன், 20 ஆகஸ்ட், 2009

அந்த நாள் ஞாபகம் .. நெஞ்சிலே

ஒரு விஜயதசமி நன்னாளில் சாமினாத வாத்யார் என் கையைப் பிடித்து ஹரிஹிஓம் என்று மணலில் எழுத வைத்து 6 1/4அணா கொடுத்து சேர்ந்த பள்ளிக்கூடம் என் வீட்டிலிருந்து மூன்றாவது கட்டிடத்தில் இருந்தது. அதனால் முதல் நாள் பள்ளி செல்லும்போது அழவேண்டும் எனக்கூட தோன்றவில்லை . மனோரமா டீச்சர் என் க்ளாஸ் டீச்சர். டீச்சர் என்றால் பெண்பால். வாத்யார் ஆண்பால் ... அது அப்படித்தான் ! மனோரமா மேடம் மிக பொறுமையான அன்பான டீச்செர். இரண்டாவது வகுப்பில் லில்லி புஷ்பம் .கௌதமன் சொன்னாற்போல் சற்றே கடுமையாக பேசுவார், நடத்துவார். எப்பொழுதும் மொட மொட புடவை , சின்ன குடையை ஆட்டி ஆட்டி பஸ் ஸ்டாண்டு அருகாமையிலுள்ள வீட்டிலிருந்து மனோரமா ,லில்லிபுஷ்பம் இருவரும் சேர்ந்து வருவதும் போவதும் அழகாக இருக்கும். சந்தானம் என் வகுப்புதான். அவன் பாக்கெட்டில் ஸ்கூல் வரும்போது சர்க்கரையும் அரிசியும் அல்லது குழம்புத்தான் (கறிகாய்) கட்டாயம் இருக்கும்!!
மூன்றாவது வகுப்பு சிங்காரம் பிள்ளை வாத்யார் மிக நன்றாகப் பாடுவார். நாலாவதில் மாரிமுத்து வாத்யார்.நாடக வசனம் எழுதுவது,பேச,நடிக்கச சொல்லி கொடுப்பது அவர் ஸ்பெஷாலிடி.5வதில் கோவிந்தராஜ் ஸார்.மனக்கணக்கு டக் என்று பதில் சொல்லாவிட்டால் மூக்குபொடி போட்ட கையோடு மூக்கை திருகுவார்.அதற்கு பயந்தே அவர் கேள்விக்கு வேகமாக,சரியாக, உடனடியாக பதில் சொல்லி விடுவோம்.
நான் பள்ளியில் சேர்ந்தபோது நடேச ஐயர் ஹெட்மாஸ்டர். அவருக்கு அடுத்து சுப்ரமணிய ஐயர். காரணப் பெயராக செவிட்டு வாத்யார் என்று அழைக்கப்பட்டார்.அவர் முகத்தில் காது கேளாததால் வரும் சந்தேகமும் கோபமும் கல்ந்த பார்வை ( என்னை வச்சு காம்டி கீமடி ப்ன்னிடலியே ?! ) அதனால் அவர் க்ளாஸ் பக்கமே போகமாட்டோம். சில காலம் அவர் ஸ்கவுட் மாஸ்டராயிருந்தார். தேர்முட்டி ஸ்கூலில் இருந்து ராஜாராம் ஸார் வந்தார். அவர் ஸ்கவுட்ஸ் மாஸ்டரானார்.அவர் வந்த பின்தான மடிப்பு கலையாமல் உடுத்தினால் எவ்வளவு மிடுக்காக இருக்கும் என்பது புரிந்தது.அந்த காலகட்டத்தில் அவர் மாடர்னாக இருந்தது எங்களை பெரிதும் கவர்ந்தது.
அந்த பள்ளியில் 5வது வரைதான் வகுப்புகள். எனவே 6வதுக்கு வேறு பள்ளிக்குப் போக வேண்டும். நாகையில் இரண்டு ஹைஸ்கூல்தான். ஒன்று நேஷனல் ஹைஸ்கூல் மற்றொன்று CSI ஸ்கூல். அனேகமாக நேஷனல் ஸ்கூல் பள்ளிகளில் படித்தவர்கள் நேஷனல் ஹைஸ்கூலுக்குத்தான் செல்வர். என்னுடன் படித்த சந்தானம்,ராமன்,முத்துரத்தினம்,சிவராமன்,சிவசங்கரன்,தண்டபாணி, மணிவண்ணன், G.R.குமார், சந்துரு எல்லோரும் பெரிய பள்ளிக்கூடம் சென்றோம்..தேர்முட்டி ஸ்கூல்,மெத்தை பள்ளிக்கூடம்,வெளிப்பாளயம் ஸ்கூல் என இதர பள்ளி மாணவர்களும் எங்களுடன் சேர்ந்தனர். (தொடரும்)
with love and affection,
rangan

1 கருத்து:

  1. நான் படித்தது எல்லாம் CSI அதனால் வாத்தியார் பெயர்கள் கேள்விப்படாத வகையில் இருக்கு.

    பதிலளிநீக்கு