புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆடிப்பூரத் திருவிழா !

26.07.2009 அன்று திருநாகை திருக்காயாரோகண சுவாமி திருக்கோயிலில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் (பூரம் கழித்தல்) நடந்திருக்கும். நாகையில் இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும், ஆடிப்பூர விழா எப்போது வரும் எனக் காத்திருப்போம். கோவிலில் விழாவிற்காகக் கொடி ஏற்றுவதிலிருந்தே களை கட்ட ஆரம்பிக்கும். பந்தல்கள் கட்டுவதும், வாகனங்களுக்கு மராமத்து மற்றும் வர்ணம் பூசுவதுமாக கோவில் வளாகத்தில் விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும. தேர் பழுது பார்க்கப்பட்டு தேரின் கீழ்ப்பகுதிக்கும், சக்கரங்களுக்கும் கரு வண்ணம் அடித்து ரெடியாகும். அலங்கார சீலைகளும், குதிரை பொம்மைகளும் சீர் செய்யப்படும். சப்பரங்கள், உற்சவ மூர்த்திகள் மாத்திரம் பின் தங்குவார்களா? துரை குருக்களும், சோமு குருக்களும் விக்ரகங்களை ஆபரணங்களுடன் நேர்த்தி செய்வார்கள். கோவில் குளமும் மராமத்து செய்யப்பட்டு பாசிகள் நீங்கி அழகாக இருக்கும் கோவிலுக்கு வெளியே சன்னதியில் கடைகள் ஒவ்வொன்றாக வரும்.

.கல்சட்டி, பொம்மை , பிளாஸ்டிக் சாமான்கள், பீங்கான் ஜாடிகள், வ்ளையல்கள், கண்ணாடி, சீப்பு, ரிப்பன், இமிடேஷன் நகைகள் என யாவும் விற்பதற்கு வியாபாரிகள் தங்கள் கடைகளை ஜோடித்து தயாராவார்கள். பெரியவர்,சிறியவர் என அனைவருக்கும் தேவையான சாமான்களை கொண்டுவந்து கடைகளில் நிரப்புவார்கள். இந்த கடைகள் விழாவிற்கு 10 நாள் முன்னும் .10 நாள் பின்பும் இருக்கும். தின்பண்டங்கள் விற்பவர்களும் ஜரூராக தங்கள் உப்கரணங்களுடன் வந்து எல்லோரையும் பட்சண வாசனையால் இழுப்பார்கள். ரங்க ராட்டினம், குடை ராட்டினம் என குழந்தைகளை வசீகரிக்கும் விளையாட்டுகள் வரும்.

விழா ஆரம்பநாள் முதல் காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், வித விதமான வாகனங்களுடனும், பரிவாரத்துடன் நகரில் ஊர்வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும். அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வரக் கலைஞ்ர்களும், ஓதுவார்களும் வாசித்தபடி , ஓதியபடி வருவர். நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்கும். இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும். மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து, கோலமிட்டு விமரிசையாக வரவேற்பர்.

நான் என் நண்பர்களுடன் தினமும் கோவில் செல்வேன். இந்த காலத்தில் எங்கள் விளையாட்டுத் தலம் கோவிலாக மாறிவிடும். விழாவை ஒட்டி ஊர் மக்கள் வெளி ஊரிலிருந்து வந்த வண்ணம் இருப்பர். பழைய நண்பர்களையும் காண, பழக இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். கடைகளில் ரோஸ்கலர் ஜவ்வு மிட்டாய், குசசி ஐஸ்க்ரீம், கடல் பாசி என்கிற பல வண்ணமான தின்பண்டத்தையும், ருசி பார்ப்போம். கோலிகுண்டு, பம்பரம் இத்யாதி வகைகளை inventory update& replenish செய்ய நல்ல சமயம் இதுவே.

பெரிய வித்வான்கள்(ஏகேசி,இஞ்சிக்குடி,குளிக்கரை போன்றவர்கள் மற்றும் மதுரை சோமு) கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டுச் செல்வார்கள். அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை, மாலை எந்நேரமும் கோவிலில் திரளாகக் கூட்டம்!. ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது AKC நடராஜன், உன்னியுடன் க்ளாரினெட் வாசிப்பார். அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தருவாள். நம்மூரில் பின்னலங்காரம் மிக விசேஷமாக இருக்கும். அதைக் காணும் விதத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வைக்கப்படும். ஆடிப்பூரம் கழிப்பு காலை 11 மனிக்குள் முடியும். இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும்.

தேர் அன்று காலை தேர் நிலையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களால் இழுக்கப்படும். முட்டுகட்டையை 20,30 பேர் கண்காணித்து தேரின் வேகத்தையும், போக்கையும் கட்டுப்படுத்துவார்கள். எல்லாம் சரிவர நடந்தால் தேர் மீண்டும் நிலைக்கு சாயங்காலம் வந்துசேரும். எங்கேயானும் சிக்கிக் கொண்டால் மறு நாள்தான் வந்து சேரும் . தேருக்கு முன் எக்காளம் ஊதுவோர், தமுக்கு அடிப்போர் என ஆர்பபாட்டமாக இருக்கும். தேரினுள் வாத்யக்காரர்கள் அமர்ந்து வாசிப்பர். கோவில் விழாவினால் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வலுப்படும். கோவிலில் தேவையான பணிகள் நடக்கும்; கோவிலுக்கு வருமானமும் அதிகரிக்கும். எனவே ஆடிப்பூரம், மாரியம்மன் கோவில் செடில், நாகூர் கந்தூரி, வேளாங்கண்ணி பண்டிகை போன்ற சமயங்களில் நம் குடும்பத்துடன் நம் ஊருக்கு சென்றால் ஊருடன் நமக்குள்ள தொடர்பு காலத்திற்கும் நிற்கும். நம் குழந்தைகளும் நம்முடைய கலாசாரத்தையும், கோவில்களையும், பழக்க வழக்க்ங்களையும் அறிந்துகொள்வாரகள். பிறந்த ஊரின் வளர்ச்சியில் நம் பங்கு மிக அவசியம், நம்முடைய வளர்ச்சியை அறிந்து கொள்ள நம் ஊர் நமக்கு நல்ல உரைகல்லாகவும் இருக்கும்.

நாகையில் இதைத் தவிர பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி, சிக்கில் சூரசமஹாரம், திருவாரூர் தேர் மற்றும் தெப்பத் திருவிழா என்று வருடம் முழுதும் எங்கேயாவது விழாக்கள் நடக்கும். ஒவ்வொரு விழாவும் முடிந்த பின் ஏக்கப் பெருமூதச்சுடன் அடுத்த விழாவை எதிர் நோக்குவோம். அந்த காலகட்டத்தில், பொழுது போக்கு இப்படித்தான்!. டி. வி - மக்களைக கட்டுப்படுத்தாத (கட்டிப்போடாத ) காலம்.!
இதை எழுதும்போதே, எனக்கு நுப்பது வருடங்கள் பின் சென்ற உணர்வு. அதேசமயம் எல்லாமே நேற்று நடந்ததுபோல ஞாப்கம். இந்த கலந்த அனுபவம், வாசிப்பவர்களுக்கும் ஏற்பட்டால் , என் கட்டுரை வெற்றி பெற்றதாக நினைப்பேன்.
அன்புடன்
ரங்கன் (rangan1948@yahoo.com)

1 கருத்து:

  1. ஒரு முறை - ஷேக் சின்ன மௌலானா
    நாகை (பெருமாள்?) கோவில் திருவிழாவில்
    சுவாமி ஊர்வலம் வந்தபோது
    விடிய விடிய வாசித்த "சக்கனி ராஜ"
    கரகரப்ரியா - இரவு முழுவதும்
    கரைந்து கரைந்து கேட்டது
    மறக்க முடியாத அனுபவம்.

    பதிலளிநீக்கு